Breaking News
recent

நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம்பாருக்குள்ளே நல்ல நாட்டை பாழ்படுத்தும் !



இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர், இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்கள், சமீப காலமாக, சர்ச்சைகளின் சர்தார்ஜி ஆகி வருகிறார்.
தி இண்டு ஆங்கில இதழ் (1/10/2014)`Katju favours uniform civil law – கட்ஜு பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கிறார்’ என்னும் தலைப்பில் ஒரு செய்தி வெளியாக்கி இருக்கிறது.
தி டைம்ஸ் ஆஃப் இண்டியா ஆங்கில ஏடு, இதே செய்தியை“Katju: Muslim personal law is barbaric”முஸ்லிம் தனியார் சட்டம் காட்டுமிராண்டித்தனமானது – கட்ஜு” என்று தலைப்பிட்டு பிரசுரித்திருக்கிறது.
இரண்டு ஆங்கில இதழ்களிலும் கட்ஜு கூறியதாக வெளி வந்துள்ள செய்திகளை தொகுத்துப் பார்க்கும் போது கட்ஜு அவர்கள் தன்னை இந்திய உச்சநீதிமன்றத்தின் உச்ச நீதிபதி யாக இருந்ததை மறந்து விட்டிருக்கிறார் என்பதும், இந்திய பிரஸ் கவுன்சில் என்னும் பொறுப்பில் இன்றளவும் இருக்கிறார் என்பதையும் மறந்திருக்கிறார் என்பதும் தெளிவாகிறது.
இந்தியா முழுவதற்கும் ஒரேவிதமான சிவில் சட்டம் வேண்டும் என்னும் இந்துத்துவப் பிரச்சாரத்தை, கட்ஜு தனது பிரியமான கொள்கையாகக் கொண்டு முஸ்லிம் தனியார் சட்டம் பற்றி பிராண்டியிருக்கிறார் என்பதுதான் உண்மை.
“முஸ்லிம் தனியார் சட்டம், அநீதியானது – சமநீதிக்கு எதிரானது – பெண்களை தாழ்த்துகிறது – ஆண்களை உயர்த்தி வாழ்த்துகிறது. இன்றைய நவீன நாடுகள் அனைத்திலும் ஒரே விதமான சட்டம் அமுலில் இருக்கும்போது, இந்தியா மட்டும் விதிவிலக்காக இருக்க என்னகாரணம்? முஸ்லிம் வாக்கு வங்கிதான். காட்டுமிராண்டித்தனமான, பிற்போக்குத்தனமான, அநீதியான ஆணையும் – பெண்ணையும் சமமாக நடத்தாத முஸ்லிம் தனியார் சட்டத்தை புறந்தள்ளி விட்டு இந்தியா முழுமைக்கும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதை வரவேற்கிறேன்.’’
- இப்படிப்பட்ட கருத்து முத்துக்களை கட்ஜு கொட்டி பரப்பி விட்டு குமுறியிருக்கிறார்.
அதிநவீன அமெரிக்க நாடு முழுவதிலும் ஒரே சட்டம் இருக்கிறதா? ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு சட்டம் இருக்கிறது. அமெரிக்க மாநிலங்களில் 10-க்கும் மேற்பட்டவை களில் ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள சட்டம் வைத்திருக்கிறார்கள். கட்ஜு பேசும் நவீன நாடுகளான ஐரோப்பிய நாடுகள் 19-ல் ஆணும் – ஆணும், பெண்ணும் – பெண்ணும் விவாகம் செய்து கொண்டு மகிழ்ச்சிப் பொங்க வாழ்ந்து சொத்து பாகப்பிரிவினை செய்துகொள்ள சட்டம் போட்டிருக்கிறார்கள். இந்த சட்டங்கள் இந்தியாவுக்குள் வர வேண்டும் என்று விரதம் இருக்கிறாரா கட்ஜு?
இஸ்லாமியச் சட்டம் காட்டுமிராண்டிச் சட்டம் என்கிறாரே கட்ஜு, இன்றைக்கு அவரின் செய்தியை தந்த `தி இண்டு’ மற்றொரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. மகளிருக்கான தேசிய கமிஷன் தலைவராக பொறுப்பேற்றுள்ள திருமதி லலிதா குமாரமங்கலம் கூறியுள்ளார்…. இந்தியாவில் ஆயிரம் ஆண்களுக்கு 800 பெண்கள் என்கிற விகிதத்தில் இருப்பதால் ஒரே பெண்ணை பல ஆண்களுக்கு திருமணம் செய்து வைப்பதும், மணப் பெண்களை விற்பனைப் பொருட்களாக ஆக்குவதும் நாட்டில் நடப்பாகி விட்டது’ என்று கூறியிருக்கிறார்.
இன்றைக்கும் நேபாள எல்லையில் உள்ள இந்திய கிராமங்களில் ஒரு பெண்ணை 5 ஆண்கள் திருமணம் செய்து கொண்டு நவீன காலத்து பஞ்சப் பாண்டவர்களையும், பாஞ்சாலியையும் நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த காட்டுமிராண்டித்தனங்கள் யாவையும் இந்திய முஸ்லிம்களும் பின்பற்ற வேண்டும் என்கிறாரா கட்ஜு?
இஸ்லாமிய சட்டத்தில் ஆண் `தலாக்’ சொல்லி விவாகரத்து செய்யலாம்.;ஆனால் பெண்கள் கோர்ட்டுக்கு போக வேண்டும் என்று பெண்களுக்கு பரிந்து பேசுபவது போல பாசாங்கு வாதம் ஒன்றையும் முன் வைத்திருக்கிறார். இன்றைக்கு தமிழ் ஏடுகள் எல்லாவற்றிலும் `தி டைம்ஸ் ஆஃப் இண்டியா’ ஆங்கில ஏடுகளிலும்‘Man kills wife for refusing divorce’என்னும் தலைப்பில் ஒரு செய்தி பிரசுரமாகியிருக்கிறது.
மனைவியைப் பிரிவதற்குரிய சிறந்த வழி ஒன்று தெரியாத அந்தக் கணவன் கொலைகாரனாக மாறியிருக்கிறான்! இஸ்லாமிய தலாக் முறையை அந்தக் கொலைக்காரக் கணவன் தெரிந்திருப்பானாகில் கொலைகாரனாக மாறியிருப்பானா?பிடிக்காத மனைவியை காலமெல்லாம் தூக்கி சுமக்கும் சுமை தாங்கியாக ஆண் இருக்க வேண்டும் என்று கட்ஜு நினைக்கிறாரா? இஸ்லாமிய சட்டத்தில், `தலாக்’ சொல்லும் அதிகாரம் ஆணுக்கும் உண்டு;
பெண்ணுக்கும் உண்டு. பெண் `தலாக்’ சொல்வதை “குலா’’ என்பார்கள். கணவன் – மனைவி மனம் ஒத்து மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவதற்குத் தான் திருமணம் நடக்கிறது. திருமணம் நடந்த பிறகு எலியும், பூனையுமாக – பாம்பும், தவளையுமாக ஆணும் – பெண்ணும் இருந்தாலும் ஒரேகூட்டில் ஒரே வளையில் இருந்துதான் ஆக வேண்டும் என்று கூறுவது காட்டுமிராண்டித்தனமா?
மனம் ஒப்பாதவர்கள் மனதாலும், உடலாலும் பிரிந்து மறுமணம் செய்து மனிதர்களாக மகிழ்ச்சியாக வாழ்வதற்கு `தலாக்’ சொல்லிக் கொள்ளலாம் என்று வாழ்வை இனிமைப் படுத்துவதற்காக சட்டத்தை எளிமைப்படுத்தியிருப்பது காட்டு மிராண்டித்தனமா? என்பதை கட்ஜு கூற வேண்டும்.
ஒரேவிதமான சிவில் சட்டம் என்பது எந்த நாட்டிலும் இல்லை;எல்லா நாட்டிலும் அந்தந்த நாட்டு மக்களின் மத அனுஷ்டானங்கள், சடங்கு – சம்பிரதாயங்கள், ஆசாரங்கள், குடும்ப சட்டங்கள் அந்தந்த மதத்தவருக்கென நடைமுறையில் இருந்து வருகின்றன. இந்தியா முழுவதிலும் ஒரே விதமான மத சட்டத்தை கொண்டு வர வேண்டும் என எண்ணுவோரும், பிரச்சாரம் பண்ணுவோரும், இந்தியாவை வாழ வைக்க வழிகாட்டக் கூடியவர்கள் அல்லர். இந்தியா என்னும் பாருக்குள்ளே நல்ல நாட்டை பாழ்படுத்த எண்ணும் கெடுமதியாளர்களின் பிரச்சாரங்கள்
அது!
பாருக்குள்ளே சிறந்த பாரத திருநாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு காத்து, வேற்றுமையில் ஒற்றுமை பேணி முஸ்லிம்கள் தங்களின் மார்க்கத்தில் நிலைநின்று வாழ்ந்து இந்த நாட்டை நல்லரசாகவும், வல்லரசாகவும் ஆக்குவதற்குப் பாடுபடு வார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
– கே.எம்.கே.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.