Breaking News
recent

அரசியல் கொலைகளுக்குப் பாஜகவினரே காரணம் : கேரளா முதல்வர் பரபரப்பு பேட்டி....!!



கேரள மாநிலத்தில் நடக்கும் அரசியல் படுகொலைகளுக்குப் பாரதீய ஜனதா கட்சியினரே காரணம் என கேரள மாநில முதல்வர், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்குக் காட்டமாக பதிலளித்துள்ளார்.

கேரள மாநில முதல்வர் உம்மன்சாண்டி நேற்று சென்னை வந்தார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட கேள்விக்கு அவர் அளித்தபதில்கள் பின்வருமாறு....

கேள்வி : ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு குறித்து ?

பதில் : ஜெயலலிதா மீதான தீர்ப்பு மற்றும் தண்டனை குறித்து கருத்து கூற விரும்பவில்லை.

கேள்வி : கேரளா மாநில பூரண மதுவிலக்கு சம்பந்தமாக ?

பதில் : கேரள மாநிலத்தில் பூரண மதுவிலக்கு திட்டத்தைப் படிப்படியாக அமல்படுத்தி வருகிறோம்.

இதனால் அரசுக்கு ரூ.7 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும். ஆனால் எங்களுக்கு ரூ.9 ஆயிரம் கோடி வருவாயை விட மாநில மக்களின் உயிர் தான் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.

இதை கருத்தில் கொண்டுதான் துணிச்சலான இந்த முடிவை எடுத்து செயல்படுத்தி வருகிறோம். வருவாய் இழப்பை வேறு துறைகள் மூலம் ஈடு செய்வோம். இதன் மூலம் மாநிலத்தில் சண்டை, சச்சரவுகள் குறைந்து அமைதி ஏற்படும் என்றார்.

கேள்வி : கேரளாவில் அரசியல் படுகொலைகள் அதிகமாகி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறி உள்ளாரே ?

பதில் : கேரளாவில் ஒரு சில அரசியல் படுகொலைகள் நடந்தது உண்மைதான். அதற்கு பாரதிய ஜனதா கட்சி தான் காரணம். ஆகையால் ராஜ்நாத்சிங் கேரளாவில் உள்ள பாரதீய ஜனதா கட்சியினருக்கு அறிவுரைகளை கூறி வன்முறையில் ஈடுபடாமல் தடுத்தாலே இது போன்ற சம்பவங்கள் நடக்காது.

கேள்வி : ஜெயலலிதா போல் உம்மன்சாண்டியும் சிறைக்குப் போவார் என அச்சுதானந்தன் கூறியுள்ளாரே ?

பதில் : அச்சுதானந்தன் முதல்வராக இருந்தபோது கேரளாவில் ஊழல்கள் நடந்துள்ளன. அதுபற்றி நான் பட்டியல் போட்டால் அவரால் பதில் கூற முடியாது. கடந்த ஆட்சி காலத்திலேயே என் மீதும் எனது அமைச்சரவை மீதும் இதுபோன்ற புகார்கள் கூறப்பட்டன. 


இது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அச்சுதானந்தன் ஆட்சியில் இருந்த போது எங்கள் மீது வழக்குபோட்டு இருக்கலாமே. எந்தவித தவறும் இல்லாததால் வழக்கு போட முடியவில்லை. இப்போது ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக பேசியிருப்பார்.

கேள்வி : திருவனந்தபுரத்தில், வகுப்பில் பேசியதற்காக ஒரு மாணவன் நாய் கூண்டில் அடைக்கப்பட்டாரே ?

பதில் : இது போல் ஒரு சம்பவம் நடந்தது பற்றி அறிந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். இதையடுத்து 3 பேர் கைது செய்யப்பட்டனர். இனி இதுபோல் சம்பவங்கள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேற்கண்டவாறு அவர் பதிலளித்தார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.