Breaking News
recent

40 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் துபாய் மருத்துவமனையில் கண்டுபிடிப்பு!!



கேரளாவிலிருந்து, 40 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர், துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது, கண்டுபிடிக்கப்பட்டார். இதனால், அவரின் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேரளா திருச்சூர் மாவட்டம், சாக்கவாடுவை சேர்ந்தவர் அப்துல்லா புனதில் உஸ்மான், 60. கடந்த, 70ம் ஆண்டுகளில் துபாய் சென்று, அங்குள்ள ஹோர் அல் அன்ஸ் பகுதியில், 'அராப் நேஷனல் ஹவுஸ்' என்ற இடத்தில், சமையல்காரராக பணியாற்றியுள்ளார்.

அதன்பின் காணாமல் போன இவரை, இவரின் நண்பர்களும், குடும்பத்தினரும் தேடினர். ஆனாலும், உஸ்மான் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், கால்கள் இரண்டும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உஸ்மானை, நண்பர்கள் கண்டுபிடித்து, அவரின் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதுபற்றி உஸ்மானை கண்டு பிடித்த, துபாயில் டிரைவராக பணியாற்றும், அப்துல் கபூர் கூறுகையில், ''கேரளாவில், எங்களின் கிராமத்திற்கு அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் உஸ்மான். 20 ஆண்டுகளுக்கு முன், அவரை துபாயில் சந்தித்தேன்,'' என்றார்.

உஸ்மானை அடையாளம் கண்டு கொண்ட, அபுதாபியில் பணியாற்றும் ஹனீபா என்ற டிரைவர் கூறியதாவது: உஸ்மானிடம் அவர் பெயர் என்ன? சொந்த ஊர் என்ன என்பதை கேட்டறிந்தேன். அவரின் சொந்த ஊர் சாக்கவாடு தான். நாள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, என் மாமா ஒருவர், வளைகுடா நாட்டிற்கு வேலைக்கு வந்தார்.

அதன்பின், அவரைக் காணவில்லை; அவர் பற்றிய தகவலும் இல்லை. அதனால், அந்த மாமாவாக இருக்குமோ என்ற எண்ணத்தில், உஸ்மானை சந்தித்துப் பேசினேன்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உஸ்மானால், தன் கடந்த கால சம்பவங்களை நினைவு கூற முடிகிறது என்றாலும், நீண்ட காலமாக காணாமல் போனதற்கான காரணத்தை தெரிவிக்க முடியவில்லை. 'ஒன்றுமில்லை; ஆண்டுகள் பல ஓடி விட்டன' என்று மட்டும் கூறி வருகிறார். 

திருமணமாகாத உஸ்மான், மருத்துவமனைக்கு சிகிச்சை கட்டணமான, 3 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது. அதைச் செலுத்தி விட்டால், மருத்துவமனை நிர்வாகத்தினர், அவரை டிஸ்சார்ஜ் செய்து விடுவர். சிகிச்சை கட்டணத்தை செலுத்தி விடுவோம் என, நம்புகிறோம். 

உஸ்மானின் விசா, நவம்பர், 15ம் தேதியுடன் முடிவடைகிறது. கேரளாவில் உள்ள குடும்பத்தினரும், அவரின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அடுத்த வாரம் கேரளா செல்ல திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, ஹனீபா கூறினார்.

''என் சொந்த ஊருக்குச் செல்வேன். குடும்பத்தினரை சந்திப்பேன்,'' என, கூறி வருகிறார் உஸ்மான்.துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரியும், உஸ்மானை சந்தித்து, அவர் கேரளா திரும்ப தேவையான உதவிகளைச் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.