Breaking News
recent

ஜெயலலிதா மீதான தண்டனை - தொடரும் பரிதாப மரணங்கள்..!



அம்மா... இது அ.தி.மு.க. தொண்டர்களின் ரத்த நாளங்களில் உறைந்து போன வார்த்தை. பெற்ற தாயை விட பல மடங்கு பாசத்தால் தொண்டர்கள் உருகி அழைத்திடும் வார்த்தைதான் அம்மா.

திரண்டு நிற்கும் கூட்டத்தை பார்த்து இரண்டு விரல்களை காட்டி புரட்சித் தலைவரின் ரத்ததின் ரத்தமான உடன்பிறப்புகளே என்று ஜெயலலிதா கூறுவதை கேட்டால் போதும் ‘அம்மா... அம்மா...! என்று கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய உற்சாகத்தில் துள்ளுவார்கள்.

நேற்றைய தீர்ப்பு லட்சக் கணக்கான தொண்டர்களை அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தி இருக்கிறது.

18 ஆண்டுகளாக உருண்ட வழக்கின் தீர்ப்பு பெங்களூர் நீதிமன்றத்தில் நேற்று வெளியாக இருந்ததை அறிந்ததுமே கடைகோடி தொண்டர் வரை ஒவ்வொருவரும் ‘அம்மா’ விடுதலையாக வேண்டும் என்று உள்ளப்பூர்வமாக உருகி வேண்டினார்கள்.

வழிபாட்டு தலங்களில் எல்லாம் வாய்விட்டு கதறி மன்றாடினார்கள். ‘தெய்வமே. எங்கள் அம்மாவுக்கு எந்த தண்டனையும் கொடுத்து விடாதே’ என்று.

நேற்று அதிகாலை 4 மணிக்கே பெங்களூர் வீதிகளில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கட்சி நிர்வாகிகள் கூடி நின்றார்கள்.

போயஸ் கார்டன் வீட்டில் இருந்து ஜெயலலிதா புறப்பட்டது முதல் ஒட்டு மொத்த தமிழகத்தின் பார்வையும் பெங்களூரை நோக்கியே இருந்தது.

என்ன ஆகும்... என்ன ஆகும்... என்று நிமிடங்கள் யுகங்களாய் நகர தீர்ப்பு நேரமும் நெருங்கியது. ஜெயலலிதா ‘குற்றவாளி’ என்று நீதிபதி குன்ஹா அறிவித்ததும் இடி விழுந்தது போல் தொண்டர்கள் துடித்து போனார்கள்.

முதல் – அமைச்சராக கம்பீரமாய் வலம் வந்த ஜெயலலிதா கோர்ட்டில் இருந்து ஜெயிலுக்கு நடந்து சென்றதை பார்த்ததும் அங்கு நின்ற அமைச்சர்கள் மனம் உடைந்து கதறி அழுதார்கள்.

ஜெயலலிதா ஜெயிலுக்குள்.... நிராதரவாய் தவிக்கிறோமே... என்று திகைத்து, தவித்து பெங்களூர் வீதிகளில் அமைச்சர்கள் அமர்ந்து இருந்தார்கள்.

எப்படியும் விடுதலையாகி விடுவார் என்ற நம்பிக்கையுடன் இனிப்புகளும், பட்டாசுகளும் வாங்கி வைத்தபடி காத்திருந்த தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பிற்பகலில் ஜெயலலிதா குற்றவாளி. 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை. ரூ. 100 கோடி அபராதம் என்று தொலைக்காட்சிகளில் செய்தி வந்ததும் தொண்டர்களின் மகிழ்ச்சி தொலைந்தது.

தலைமை கழகத்தில் திரண்டு நின்ற பெண்கள் தலையிலும், மார்பிலும் அடித்து கதறி அழுதார்கள். துக்கம் தாங்காமல் தொண்டர்களும் அழுதனர். வேட்டி தலைப்பாலும், கைக்குட்டையாலும் வடிந்த கண்ணீரை துடைத்த படி அழுது ஏங்கி தவித்த தொண்டர்களை சமாதானப்படுத்த முடியவில்லை. தலைமைக் கழக வளாகம் முழுவதும் சோக பிரளயமாய் காட்சியளித்தது.

தீர்ப்பு வெளியானதும் தமிழகம் முழுவதும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். வேதனையில் செய்வதறியாது தவித்தார்கள். ‘யார் யோக்கியம்? அம்மாவை இப்படி பண்ணிட்டாங்களே... பாவிகள்!’ என்று பலர் வாய் விட்டு ஆவேசத்தில் கதறினார்கள். கிட்டத்தட்ட மொத்த தமிழகமும் சோகத்தின் பிடியில் சிக்கி தவித்தது.

சென்னை வளசரவாக்கம் அடுத்த ஏ.பி.என்.பிரதாப் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (58) ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே பெட்ரோல் கேனை எடுத்துக் கொண்டு நடுரோட்டுக்கு வந்த அவர் அம்மா வாழ்க என்று கூறி தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகள் ஜோனஷா (19). லால்குடியில் உள்ள பாரதிதாசன் உறுப்பு கல்லூரியில் பி.ஏ. 2–ம் ஆண்டு படித்து வந்தார்.

ஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கியதை அறிந்த ஜோனஷா, ‘எங்களுக்கெல்லாம் இலவச லேப்– டாப் கொடுத்தவரை சிறையில் அடைத்து விட்டார்களே’ என கூறி துக்கம் தாளாமல் அழுதார். பின்னர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நெய்வாசல் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (47) மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

நாகை மாவட்டம், வேதாரண்யம்–நாகை மெயின்ரோட்டில் கோர்ட்டு அருகே வசித்து வருபவர் கோவிந்தராஜ் (56). தீர்ப்பை கேட்டதும் மாரடைப்பில் மயங்கி விழுந்து இறந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள சேவுகம்பட்டி பேரூராட்சி முத்துலாபுரத்தை சேர்ந்தவர் பாலம்மாள் (52). தீர்ப்பை அறிந்ததும் நெஞ்சுவலி ஏற்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த மாரியப்பனும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நாலாயிரம் (48). தென்காசியில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு பஸ் முன்பு பாய்ந்தார். இதில் அவரது 2 கால்களும் பஸ் சக்கரத்தில் சிக்கி நசுங்கின. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச் சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாலாயிரம் பரிதாபமாக இறந்தார்.

திருவோணம் அருகே உள்ள காட்டாத்திசித்தன் தெருவை சேர்ந்தவர் பழனியப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் மயங்கி விழுந்த அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

கரூர் மாவட்டம் நெடுங்கூர் கிழக்கு கஸ்பா காலனியை சேர்ந்த ராமசாமி (60) மூலக்காட்டனூரை சேர்ந்த அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி வார்டு செயலாளர் வேலுச்சாமி (50) ஆகியோரும் மாரடைப்பால் மரணம் அடைந்தனர்.

தளவாபாளையத்தை சேர்ந்த ஜீவா என்ற பாக்கியராஜ் (40) என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை முதல் தொலைக்காட்சியில் ஜெயலலிதா தீர்ப்பு குறித்து பார்த்துக்கொண்டிருந்தார். ஜெயலலிதா குற்றவாளி என்றும், அவருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை என்ற அறிவிக்கப்பட்டதும் ஜீவாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் இறந்தார்.

சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (70). அ.தி.மு.க. தொண்டர். தீர்ப்பு வெளியானதும் விஷம் குடித்தார். சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார்.
 
ஈரோடு அடுத்த மொடக்குறிச்சி அருகே லக்காபுரம் நெல்லுகுத்து காடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (40). தறிபட்டறை தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
 
ஜெயலலிதாவுக்கு பெங்களூர் கோர்ட்டில் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட தகவல் லட்சுமணனுக்கு கிடைத்தது.
 
இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்து விரக்தியில் இருந்து வந்தார். அனைவரிடமும் இதை சொல்லி புலம்பி கதறி அழுது கொண்டே இருந்தார்.
 
பின்னர் வீட்டுக்கு சென்ற அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
சேலம் ஓமலூர் அருகில் உள்ள மோரூர் கே.எம்.புதூரை சேர்ந்தவர் ஜேக்கப் என்கிற பழனிச்சாமி (42). டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதை பார்த்து பழனிச்சாமி கதறி அழுதார்.
 
இரவு 8 மணி அளவில் பழனிச்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை பொம்மிடியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். இங்கு அவர் இரவு 11 மணி அளவில் இறந்து விட்டார்.
 
இதுவரை 14 பேர் தாங்கள் உயிருக்கும் மேலான நேசிக்கும் அம்மாவுக்கு ஏற்பட்ட சோதனையை தாங்க முடியாமல் இன்னுயிரை மாய்த்து இருக்கிறார்கள்.
 
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு புரட்சித்தலைவி என்று தொண்டர்களிடம் தனக் கென தனி இடத்தை பிடித்தவர் ஜெயலலிதா.
 
எத்தனையோ சோதனையான காலகட்டங்களை எல்லாம் துச்சமென தூக்கி எறிந்து தனக்கு நிகர் தான்தான் என்று நிரூபித்து நிமிர்ந்து நின்றவர்.
 
பாராளுமன்ற தேர்தலில் அத்தனை கட்சிகளையும் வாரி சுருட்டி களத்துக்கு வெளியே வீசி விட்டு கிட்டத்தட்ட மொத்த தொகுதியையும் (37 தொகுதிகள்) தன் வசமாக்கியவர்.
 
நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலிலும் மக்கள் மன்றம் அமோக வெற்றியை வழங்கி கொண்டாடியது.
 
ஆனால் நீதிமன்றம் தவறுகளுக்காக தண்டித்துள்ளது. இது அ.தி.மு.க.வுக்கு மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
 
அ.தி.மு.க.வின் அரசியல் வாழ்வு நீதி தேவனின் கைகளில் உள்ளது. அவர் எடுக்கப் போகும் அடுத்த முடிவுக்காக காத்திருப்பது தொண்டர்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழகமும்தான்.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.