Breaking News
recent

பெரம்பலூரில் "காற்றில் பறக்கும்' போக்குவரத்து போலீஸார் உத்தரவு...



சிக்னல் அருகே வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்ற போக்குவரத்து போலீஸாரின் உத்தரவை வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்றாததால், இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, இந்த உத்தரவை பின்பற்றாத வாகனங்கள் மீது கடுமைமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
பெரம்பலூர் நகரில் தொடர்ந்து நிகழும் விபத்தை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் சங்குப்பேட்டை, காமராஜர் வளைவு, புறநகர்ப் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், சங்குப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே செயல்படவில்லை. மேற்கண்ட பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நிலையிலும், ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி வருகின்றனர்.
இதனால், பின்னால் வரும் வாகனங்கள் செல்வதற்கு வழியில்லாமல் பயணிகளை ஏற்றும் வாகனங்களை தொடர்ந்து, ஷேர் ஆட்டோக்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து போக்குவரத்து போலீஸார் இப்பகுதியில் வாகனங்களை யாரும் நிறுத்தக் கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்தனர்.
அவ்வப்போது, மேற்கண்ட பகுதிகளில் போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படையினர் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்த நின்றிருந்தாலும் விதிமுறைகளை மீறும் ஓட்டுநர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. பல நேரங்களில் இந்த இடத்தில்தான் ஷேர் ஆட்டோக்களும், பேருந்துகளும் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இதனால், இப்பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதையறிந்த போக்குவரத்து போலீஸார், போக்குவரத்துக்கு இடையூறாக மற்றும் சிக்னல்கள் அருகே வாகனங்களை நிறுத்தக்கூடாது என எச்சரிக்கை பலகைகள் வைத்திருந்தாலும், அவற்றை வாகன ஓட்டுநர்கள் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக, பெரும்பாலான ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, இப்பகுதியில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது போக்குவரத்து போலீஸார் கடும் நடவடிக்கை எடுப்பதோடு, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
மேலும், வாகனங்களை சற்று தூரம் தள்ளி நிறுத்தி, பயணிகள் ஏறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.