Breaking News
recent

கந்து வட்டியால் கொடுமையா? 25615086க்கு போன் செய்யலாம்...



அதிகரித்து வரும் கந்து வட்டி கொடுமையை தடுக்க கமிஷனரிடம் நேரடியாக புகார் அளிக்க தனி போன் நம்பர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியை கமிஷனர் ஜார்ஜ் துவக்கி உள்ளார். சென்னையில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், புகார் அளிக்க வருபவர்களை அலைக்கழிப்பதும் நீடிக்கிறது. இதை கட்டுப்படுத்த பொது மக்கள் புகார் பிரிவு கமிஷனர் அலுவலகத்தில் துவக்கப்பட்டது. இதில் தினமும் நூற்றுக்கணக்கானோர் புகார் அளித்தனர். இடையில் அது நிறுத்தப்பட்டது. போலீஸ் நிலையங்களில் புகார் வாங்க மறுக்கும் இன்ஸ்பெக்டர்கள் மீது நேரடியாக புகார் அளிக்க தொலைபேசி நம்பர் ஒன்றை அறிமுகப்படுத்தினார் கமிஷனர் ஜார்ஜ். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஏராளமான புகார்கள் குவிந்தது. இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இப்போது இன்னொரு முக்கிய பிரச்னையாக இருப்பது கந்துவட்டி கொடுமை. தாதாக்கள், ரவுடிகள், அரசியல்வாதிகள், பைனான்ஸ் என்ற பெயரில் கந்து வட்டிக்கு கடன் கொடுக்கும் கும்பல் பெருமளவில் உள்ளது. லோக்கல் போலீசாருடன் கைகோர்த்துகொண்டு இவர்கள் பொதுமக்களுக்கு பெரும் தொல்லைகள் கொடுக்கின்றனர்.
சொத்துக்களை அபகரிப்பதாக மிரட்டுவது, அதிக பணம் கேட்பது என்று ஏகப்பட்ட புகார்கள் வருகின்றன. ஆனால் இந்த புகார்களை கையாளும் போலீசார் சம்பந்தப்பட்ட கந்து வட்டி ஆசாமிகளின் செல்வாக்கு காரணமாக புகார்களை எடுப்பதில்லை. இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் புகார் அளித்தவரின் விவரங்களை சம்பந்தப்பட்ட பார்ட்டிகளிடமே சொல்லும் பிரச்னையும் உள்ளது. இதை தடுக்க கந்துவட்டி கும்பல் பற்றி புகார் அளிக்க ஏற்கனவே தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. ஆனால் அதில் புகார் அளித்தால், அங்கிருந்து மத்திய குற்றப்பிரிவு, அங்கிருந்து கூடுதல் ஆணையர், பின்னர் கமிஷனர் பார்வைக்கு சென்று கமிஷனர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டால் மீண்டும் அதே வழியில் கீழே வந்து தனிப்படை அமைத்து பிடிப்பார்கள். இதனால் ஒரு மாதம் வரை காலதாமதம் ஆகும்.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட பார்ட்டி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வாங்கிவிடும். இதை தடுக்க தற்போது ஏற்கனவே இன்ஸ்பெக்டர்கள் பற்றி புகார் அளிக்க கொடுக்கப்பட்டிருந்த 044-25615086 என்ற எண்ணிலே கந்து வட்டி பற்றிய புகாரை அளிக்கலாம். இதன் மூலம் இந்த புகார் ஏற்கப்பட்டவுடன் மெயில் மூலம் நேரடியாக கமிஷனரிடம் செல்லும். கமிஷனர் பார்த்து உடன் கூடுதல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்க உடனடியாக துணை ஆணையரே நேரடியாக விசாரிப்பார். இந்த ஹாட்லைன் வசதி அறிமுகப்படுத்தபட்டவுடன் முதல் ஆளாக முகப்பேரை சேர்ந்த பூலோக பாண்டியன் என்ற கந்து வட்டி ஆசாமி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் ரூ.55 லட்சம் கந்து வட்டி வாங்கிய காசி விஸ்வநாதன் என்ற பில்டரை, அவர் ரூ.1 கோடியே 8 லட்சம் கொடுத்த பிறகும் மேலும் ரூ.55 லட்சம் தரும்படி மிரட்டியுள்ளார். அவர் லோக்கல் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் ஹாட்லைன் மூலம் கமிஷனரிடம் புகார் அளிக்க கமிஷனர் உத்தரவின் பேரில் பூலோக பாண்டியன் கைது செய்யப்பட்டார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.